வாசக - எழுத்தாள நண்பர்களுக்கு வணக்கம்,
பிரதிலிபியில் புதிதாக எழுதத் தொடங்கும் பல எழுத்தாளர்கள், பிரதிலிபியில் எப்படி நிறைய வாசகர்களை பெறுவது, நிறைய வாசகர்களிடம் படைப்புகளை கொண்டு சேர்ப்பது எப்படி, பிரதிலிபி எப்படி இயங்குகிறது என்று பலவிதமான சந்தேகங்களை கேட்பதுண்டு. மின்னஞ்சல் அனுப்பியோ, தொலைபேசியில் அழைத்தோ கேட்பவர்களிடம் விரிவாக பதிலளிப்போம். ஆனால், அதனை அனைத்து வாசகர்கள் - எழுத்தாளர்களுக்கும் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறோம். எனவே, அதிகம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், பிரதிலிபியின் சில பகுதிகள் எப்படி இயங்குகிறது என்பதையும், பிரதிலிபியில் அதிக வாசகர்களை எப்படி சென்றடைவது போன்ற விவரங்களையும் தொடர்ச்சியாக இந்தப் பக்கத்தில் எழுத முடிவு செய்திருக்கிறோம்.
முதலில் பிரதிலிபியில் படைப்புகள் எழுதும்போது கருத்தில் கொள்ளவேண்டிய சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம் :
1) முகப்பு படம் மற்றும் தலைப்பு
பிரதிலிபியில் நீங்கள் புதிதாக எழுதுபவர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எழுதும் புதிய படைப்புகள், 'புதியவை' எனும் பகுதியின்கீழ் உடனுக்குடன் காண்பிக்கப்படும். அங்கேதான் வாசகர்கள் உங்கள் படைப்பை படிப்பார்கள். தினமும் நூற்றுக்கணக்கான படைப்புகள் அந்தப் பக்கத்தில் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். அப்படி இருக்கும்போது வாசகர்கள் உங்கள் படைப்பை எப்படி தேர்வு செய்து படிப்பார்கள்?
அங்கேதான் உங்கள் படைப்பின் தலைப்பும், முகப்புப் படமும் (cover image) முக்கியத்துவம் பெறுகிறது. வித்தியாசமான, எளிதில் ஈர்க்கக்கூடிய, படைப்புக்கு தகுந்த முகப்புப் படம் தேடி வைத்தால் வாசகர்கள் படிக்க வாய்ப்பதிகம். ஏனெனில் முதலில் கவனத்தை ஈர்ப்பது முகப்பு படமே! (கவனிக்க - நீங்கள் தேர்ந்தெடுக்கும் முகப்பு படம் காப்பிரைட் ப்ரீ (copywright free) ஆக இருக்க வேண்டும்) அதேபோல்தான் படைப்பின் தலைப்பும். படைப்புக்கு தகுந்த, பார்த்ததும் படிக்கத்தூண்டும் தலைப்பாக இருந்தால் வாசகர்கள் வாசிக்கும் வாய்ப்பதிகம். ஏனெனில், அதுபோன்ற படைப்பையே வாசகர்கள் அதிகம் படிக்கிறார்கள். பிரதிலிபியில் இது பொதுப்போக்கு.
2) எழுத்துப்பிழைகள்
பிரதிலிபியில் எழுதும் நிறைய வாசகர்கள் முதன்முதலில் எழுதுபவர்கள். அதனால் எழுத்துப்பிழை தவிர்க்க முடியாதது. அது தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக பிழைகளோடு எழுதுவது, வாசிக்கும் வாசகர்களுக்கு இடையூறாக இருக்கும். முடிந்தவரை பிழைகளை தவிர்க்க முயற்சிப்பது நல்லது. பிற எழுத்தாளர்கள் படைப்புகளை வாசிப்பது இதற்கு ஓரளவு கைகொடுக்கும்.
அதேபோல், கீழே உள்ள சுட்டியில் நீங்கள் எழுதியதை காப்பி - பேஸ்ட் செய்து சந்திப்பிழைகளை திருத்திக் கொள்ளலாம். சுட்டியை க்ளிக் செய்ய முடியவில்லையெனில், நாவி - சந்திப்பிழை திருத்தி என கூகுளில் டைப் செய்து அதற்கு போகலாம். இது சந்திப்பிழைகளை திருத்த மட்டுமே உதவும். எழுத்துப்பிழைகள் திருத்தாது. பார்க்க -
http://dev.neechalkaran.com/p/naavi.html#.XjAli2gzZPY
3) தொடர்ச்சியாக எழுதுதல்
எழுத்துக்கு அடிப்படை தொடர்ச்சியாக எழுதுவதே! எழுத எழுதவே எழுத்து மேம்படும். இதில் எந்த மாற்றுவழியும் இல்லை. எனவே தொடர்ச்சியாக எழுதினால் மட்டுமே எழுத்து மெருகேறும். தொடர்ந்து எழுதுவதைப்போல் தொடர்ந்து வாசியுங்கள். வாசிக்கும்போது எப்படியெல்லாம் எழுதலாம் என்று தெரியும். அதேபோல், நிறைய தமிழ் வார்த்தைகள் தெரிந்துகொள்ள முடியும். நிறைய வார்த்தைகள் தெரிந்துகொள்வது, நீங்கள் சொல்ல வருவதை இன்னும் சிறப்பாக சொல்வதற்கு பயன்படும்.
தொடர்ச்சியாக எழுதும்போது வாசகர்கள் தினமும் உங்களது பெயரை 'புதியவை' பக்கத்தில் பார்ப்பார்கள். உங்கள் படைப்பு பிடித்திருந்தால் உங்களை ஃபாலோ செய்வார்கள். உங்களை ஃபாலோ செய்பவர்கள், நீங்கள் படைப்பு பதிப்பிக்கும்போது உடனுக்குடன் நோட்டிஃபிகேஷன் பெறுவார்கள். இது ஒருவகையில் உங்களை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும்.
4) பிற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தல்
மேலே சொன்னதுபோல் தொடர்ச்சியாக வாசிக்கும்போது, அந்தப் படைப்பு பற்றிய உங்களது கருத்தை சக எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்தப் படைப்பை பற்றிய விமர்சனம் கொடுங்கள். இது அவர்கள் எழுத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், உங்கள் படைப்பை மேம்படுத்திக் கொள்ளவும் பயன்படும். பின் குறிப்பிட்ட எழுத்தாளர் உங்கள் படைப்புகளை படித்து கருத்திடவும் வாய்ப்பதிகம். இது உங்களையும் ஊக்கப்படுத்தும். படைப்பு குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்வது நம் எழுத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.
மேலே குறிப்பிட்டவை அனைத்தும் தளத்தில் பொதுவாக நடக்கும் போக்கிலிருந்து நாங்கள் கவனித்தவை. மேலும், இதுபோல் நிறைய விஷயங்களை தொடர்ந்து பகிர்வோம். வேறு ஏதேனும் விஷயங்கள் பிரதிலிபியில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால் அவற்றை கீழே கமெண்ட் செய்யவும். இணைந்திருப்போம். நன்றி.