எழுத்தாளர்கள் தங்களது எழுத்தை மேம்படுத்தி, நிறைய வாசகர்களை சென்றைடைய பிரதிலிபியில் எண்ணற்ற வசதிகளும், வழிமுறைகளும் உள்ளன. கடந்த பதிவின் தொடர்ச்சியாக , பிரதிலிபியில் அதிக வாசகர்களை பெறுவது எப்படி என்பதற்கு மேலும் சில அடிப்படையான குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.
தொடர் கதைகள் எழுதுவது :
நாங்கள் ஆராய்ந்த வகையில் பிரதிலிபியில் நிறைய வாசகர்கள் கதைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். கதைகளோடு ஒப்பிட்டால் கவிதைகளை வாசிப்போர் மிகவும் குறைவு. இதனால் பிரதிலிபி கவிதைகளை ஆதரிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எழுத்தாளர்களின் நலனை ஒட்டியே நாங்கள் இதை சொல்கிறோம். உங்களால் தொடர்கதைகள் எழுத முடியும் என்றால் நீங்கள் அதையே முயற்சி செய்யலாம். ஏனெனில் தொடர்கதைகளுக்கு பிரதிலிபியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. உங்கள் கதையின் தொடர்களை வாசிக்க வாசகர்கள் உங்கள் ப்ரொஃபைலுக்கு அடிக்கடி வருவார்கள். உங்கள் கதையின் அடுத்தப் பகுதிகளை வாசிக்க வேண்டும் என்பதற்காக உங்களை அவர்கள் பின் தொடர்வார்கள். ஆகையால் தொடர்கதை எழுதுவது உங்களுக்கு நிறைய வாசகர்களையும், பின்தொடர்வோரையும் குறைந்த காலத்திலேயே பெற்றுத் தரும்.
தனித்தன்மையோடு எழுதுதல் :
பிரதிலிபியில் வெவ்வேறு வகையான கதைகள் எழுதப்படுகிறது, ஆனால் அதில் பெரும்பாலானவை காதல் ,குடும்பம், உறவுமுறை சார்ந்தவையே. எழுதுவதில் தேர்ந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ஏனைய கதைப் பிரிவுகளையும் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அது உங்களை எழுத்தில் தனித்துக் காட்டும். உதாரணமாக அறிவியல் புனைவு, வரலாற்றுப் புனைவு, குழந்தைகளுக்கான கதைகள் போன்றவை பிரதிலிபியில் குறைவாகவே எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கமான கதைகளிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும். காதல் கதை எழுதினாலும் அதில் தனித்தன்மை வெளிப்படவேண்டும். தனித்தன்மையாக எழுத முயலும்போது நீங்கள் வாசகர்கள் மனதில் அழுத்தமாக பதிவீர்கள். உங்களது கதைகளுக்காக வாசகர்கள் காத்திருப்பர்.
உங்களது தொடர்புகளிடம் படைப்புகளை பகிர்தல் :
கதைகளுக்கு உடனடியாக பெறப்படும் பின்னூட்டங்களானது எழுத்தாளருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கும். அது அவர்களைத் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தும். நீங்கள் பிரதிலிபியில் உங்களது படைப்பைப் பதிப்பித்த பிறகு அதன் இணைப்பை உங்கள் நண்பர்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் வாட்ஸ்அப், பேஸ்புக் , ஹலோ, ஷேர் சாட் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் வழியாக பகிர்ந்து கொள்ளலாம். இது பிரதிலிபிக்கு வெளியே உள்ள வாசகர்களிடம் உங்களது எழுத்தை கொண்டுசேர்க்கும். மேலும் உங்களது எழுத்து உங்கள் அன்புக்குரியவர்களின் நாட்களில் நேர்மறையான மாற்றங்களையும் நிகழ்த்தலாம். அதனால் உங்கள் கதைகளின் இணைப்புகளை சமூக வலைத்தளங்களில் பகிர தயங்க வேண்டாம். இது எழுத்தின் ஆரம்ப நிலையில் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
எழுத்துப் போட்டிகள் :
பிரதிலிபி ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் நிறைய எழுத்துப் போட்டிகளை நடத்துகிறது. பரிசுத்தொகையோடு சான்றிதழ்கள், விருதுகள், டி சர்ட் போன்ற பரிசுகளையும் பிரதிலிபி வழங்குகிறது. போட்டிகள் உங்களுக்கு உகந்த தலைப்பு எது என்பதை கண்டுணர உதவும். மேலும் போட்டிகளில் அனைத்து எழுத்தாளர்களும் ஒரே தலைப்பின் கீழ் எழுதுவர், இதன் வழியே ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரே தலைப்பை எப்படி விதவிதமாக அணுகுகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் நம் கதைகள் மீதான விமர்சனங்களை தகுதிவாய்ந்த தேர்வாளர்களிடமிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் வெற்றிபெற்ற படைப்புகளை வாசித்து அதை எந்த காரணத்திற்காக தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதனால் நீங்கள் மீண்டும் போட்டியில் பங்கெடுக்கும் போது உங்களது எழுத்து மேம்படும். ஆகையால் எழுத்துப் போட்டிகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
வாசித்தல் :
நீங்கள் எழுத்தாளராக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு வாசகராகவும் இருக்க வேண்டும். எழுதுவதற்கு வாசித்தலே சிறந்த பயிற்சி. வாசிப்பதன் மூலம் நீங்கள் நிறைய சொற்களையும், புதியக் கோணங்களையும், வெவ்வேறு விதமான வாழ்க்கையையும், மேலும் நிறைய விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும். வாசித்தல் உங்களுக்கு எம்மாதிரியான படைப்புகள் ஏற்கனவே உங்கள் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு அறியப்படுத்தும். இது தேய்வழக்குகளை தவிர்க்க உதவும். பிரதிலிபியிலும் சரி, வெளியிலும் சரி இலட்சக்கணக்கான படைப்புகள் வாசிப்பதற்கு இருக்கிறது. எழுதுதல் உங்களது முழுநேரப் பணியாக வேண்டும் என்றால் நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் சிறந்த எழுத்தாளராக உருவெடுக்க எங்களது வாழ்த்துக்கள்
கலெக்ஷன் செய்து கொள்ளும் வசதி :
பிரதிலிபியில் நீங்கள் பதிப்பித்தக் கதைகளை கலெக்சன்கள் கீழ் உருவாக்கிக் கொள்ளலாம். இது பிரிவுகளின்படி கதைகளை வாசிக்கும் வாசகர்களிடம் உங்களது கதைகளை கொண்டு செல்ல உதவும். உங்களது படைப்புகளை நிறைவுற்ற கதைகள், குறுங்கதைகள், கவிதைகள், நாவல்கள், ஒரே கதைக்களத்தை கொண்ட படைப்புகள் என தனித்தனியே வகைப்படுத்தி வைக்கலாம். மேலும் உங்களது கதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதைகளையும் பிரித்துவைத்து அதை மற்ற எழுத்தாளர்கள், வாசகர்களிடம் கொண்டு சேர்க்கலாம். மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் மனதில் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம். உங்களது கதைகளை வாசகர்களிடம் கொண்டுசேர்த்து சிறந்த அனுபவத்தை பெற வாழ்த்துகிறோம்.
மகிழ்வுடன் எழுதுக.
-பிரதிலிபி குழு.