
பிரதிலிபிஅன்புள்ள எழுத்தாளருக்கு,
ரஞ்சித் எழுதுவது.
நீண்ட நாட்களாக, இதை எழுத நினைத்திருந்தேன். நான் CEOவாக அல்லது எழுத்தாளர்களிடம் பேசும் ஒரு பிரதிலிபி அலுவலராக இதை எழுதவில்லை. உங்களுக்குக் கடன்பட்ட ஒரு மனிதனாக எழுதுகிறேன்.
முன்பு ஒருநாள் நான் ஒரு கனவு கண்டேன். எந்தவொரு கதைசொல்லியும் மொழி, தொழில்நுட்பம் அல்லது புவியியல் உள்ளிட்ட எந்தத் தடைகளும் இல்லாமல் தங்கள் கதைகளை உலகிற்குப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் என்பதே அக்கனவு.
பெங்களூரில் ஐந்து பேருடன் பிரதிலிபி தொடங்கப்பட்ட அந்த சிறிய வீடு எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அப்போது இந்த உலகின் பார்வையில் படவில்லை. எங்களிடம் பெரிதாக தொழில்நுட்ப வளமோ, பொருளாதார வசதியோ அன்று இல்லை. ஆனால் எழுத்தாளர்களாகிய நீங்கள் எங்களுடன் இணைந்தீர்கள் !
அதுவரை நத்தைபோல் ஊர்ந்துகொண்டிருந்த எங்கள் தளத்திற்கு உங்கள் கதாபாத்திரங்களையும், உங்கள் ஆன்மாவையும் கொண்டு வந்தீர்கள்.
கடந்த 11 ஆண்டுகளில், எங்கள் பயணத்தில் பல கடினமான காலங்கள் இருந்தன. பாதையும், இலக்கும் சாத்தியமற்றதாகத் தோன்றிய எண்ணற்ற தருணங்கள் இருந்தன. இந்தக் கனவை துறந்துவிடலாம் என நினைக்கும் ஒவ்வொரு முறையும், பிரதிலிபியை திறந்து, உங்களில் ஒருவர் பதிவேற்றிய புதிய கதையைப் பார்ப்பேன். ஆம், நீங்கள் உங்கள் கதைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. நீங்கள் எனக்கு பெரிய நம்பிக்கையை அளித்தீர்கள். ஒரு யோசனையை ஒரு தொடக்க நிறுவனமாகவும், ஒரு தொடக்க நிறுவனத்தை ஒரு குடும்பமாகவும் மாற்றியுள்ளீர்கள்.
பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், எழுத்தாளர்- உறவு மேலாளர்கள், வழக்கறிஞர்கள் என எண்ணற்ற மனிதர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம். அதில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று நான் வெறுமனே பெயரளவில் சொல்லவில்லை.
இந்தப் புத்தாண்டில் நுழையும் வேளையில், உங்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்கிறேன்.
தெய்வம் உங்களுக்கு நன்மை, ஆரோக்கியம், படைப்பாற்றலை அருளட்டும். 2026 உங்கள் கற்பனை வளம் எல்லையற்ற நதியைப் போலப் பாயும் ஆண்டாக இருக்கட்டும். வாசக உள்ளங்களையும் நீங்கள் வளப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
எங்கள் நோக்கம் இப்போதுதான் தொடங்குகிறது! தலைமுறைகள் கடந்து நீடிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுகிறோம். எனது ஆழ்ந்த தனிப்பட்ட கனவு எளிமையானது: எழுத்தாளருக்கு பிற வேலைகள் தேவைப்படாத நிலை. பிரதிலிபி வருவாய் அவரது முதன்மைக் குடும்ப வருவாய் ஆகுவதை கனவு காண்கிறேன்.
உங்கள் எழுத்து வாழ்க்கையைத் தக்கவைக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறேன். பிரதிலிபியில் கிடைக்கும் வருவாய், உங்களுக்குப் பொருளாதார விடுதலையை அளிக்க வேண்டும்.
எங்கள் பாதையில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், பிரச்சனைகளை நீங்கள் சுட்டிக்காட்டும்போது அல்லது இன்னும் மேம்படுத்துவதற்கு நீங்கள் அளிக்கும் கருத்துகளை நாங்கள் கவனமாக கேட்கிறோம் என்பதை உறுதியளிக்கிறேன். இந்தக் குடும்பத்தை பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், உங்கள் நம்பிக்கைக்கு உரியதாகவும் மாற்ற நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். நீங்களே நாங்கள் இங்கு இருப்பதற்கு காரணம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
உங்கள் பயணத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அல்லது நாங்கள் இன்னும் ஏதேனும் சிறப்பாகச் செய்ய முடியும் என நீங்கள் கருதினால் தயவுசெய்து நான் உட்பட எங்களில் யாரையும் தொடர்பு கொள்ளவும். நான் எப்போதும் [email protected] இல் தொடர்பில் இருக்கிறேன். மேலும் நான் உங்களுக்கு பதிலளிக்க சரியான நபராக இல்லாவிட்டாலும், குழுவில் உள்ள பொருத்தமான நபரிடம் அதைக் கொண்டுசேர்க்கிறேன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்.
எங்களுடன் சேர்ந்து பிரதிலிபி எனும் கதையை எழுதிக்கொண்டிருப்பதற்கு நன்றி.
நன்றியுடன்,
ரஞ்சித் பிரதாப் சிங்
நிறுவனர்,
பிரதிலிபி.