வணக்கம்,
பத்து ஆண்டுகளுக்கு முன், 14 செப்டம்பர் 2014ஆம் தேதி நாங்கள் பிரதிலிபி தளத்தைத் தொடங்கினோம்.
அந்நேரத்தில், எங்களிடம் பல கேள்விகள் முளைத்தன, ஆனால் ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் வலுவாக இருந்தது. கனவுகளுக்கு மொழியும், இருப்பிடமும் தடைகளாக இருக்கக்கூடாது. படைப்பாளிகள் தங்கள் கதைகளை உலகின் பிற பகுதிகளுடன் எந்தத் தடையும் இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் உறுதியோடு இருந்தோம்.
இப்பயணம் கடினமானதாய் இருக்கும் என்று யூகித்தோம் , அதே வேளையில் எங்கள் இலக்கை நெருங்கும்போது அதற்கான பலனை எங்களுடன் சேர்ந்து எங்கள் படைப்பாளிகள் அனைவரும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
இது எவ்வளவு கடினமானது, அதே நேரத்தில் எத்தகைய அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது என்பதை எங்களால் அப்போது கற்பனை கூட செய்ய முடியவில்லை.
உங்களின் கதைகள் மாதத்திற்கு நூறு வாசகர்களால் வாசிக்கப்பட்டு, எங்கள் பயணத்தில் நூறு வாசகர்கள் இணைந்திருக்கிறார்கள் என நாங்கள் கொண்டாடிய நாட்களை இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கிறோம். இப்போது லட்சக்கணக்கான எழுத்தாளர்கள்,வாசகர்களைக் கொண்ட குடும்பமாக இருக்கிறோம், கதைகள் லட்சக்கணக்கில் வாசிக்கப்படுகின்றன!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாங்கள் பணம் சம்பாதிக்கும் அம்சங்களைத் தொடங்கவில்லை. நீங்கள் அனைவரும் பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் எழுதப்போகும் அடுத்த அத்தியாயத்திற்காக ஆர்வமுள்ள வாசகர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த மாதத்தில், அதே வாசகர்கள் தான் 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான ராயல்டியை நம் எழுத்தாளர்கள் பெற காரணமாய் அமைந்திருக்கிறார்கள். 18 எழுத்தாளர்கள் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாகவும், 500க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் 5000க்கு ரூபாய்க்கு மேல் சம்பாத்தியம் ஈட்டவும் அவர்கள் உதவியிருக்கிறார்கள். பிரதிலிபிக்கு வெளியில் யாராவது நம் எழுத்தாளர்கள் மற்றும் அவர்கள் கதைகள் மீது கவனம் செலுத்துவார்களா என்றொரு கேள்வி முன்பு இருந்தது. ஆனால் நாங்கள் இப்போது பிரதிலிபி கதைகளிலிருந்து ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ஒரு வெப் சீரிஸையும் தயாரித்துள்ளோம், இன்னும் நிறைய வரயிருக்கின்றன!
ஆனால் இந்தப் பயணம் எந்த வகையிலும் எளிமையானதாக இல்லை. உடலும், மனமும் துவண்டு , இந்த நாள் என்ன அதிர்ச்சியைத் தரப்போகிறது, என்னைச் சார்ந்தவர்களுக்கு என்ன ஆகும் என்ற பதற்றத்துடன் பல நாட்கள் கண் விழித்திருக்கிறேன். நிறுவனம் அத்தகைய கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கிறது.
அந்த இறுக்கமான நாட்களிலிருந்து எங்களை மீட்டது நீங்கள்தான். பல வருடங்களாக நீங்கள் எங்களிடம் காட்டும் நம்பிக்கையும், அன்பும் தான் ஒவ்வொரு நாளும் இப்பயணத்தில் எங்களை நிலைநிறுத்தின.
நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். நம் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் தங்களது அனைத்து நிதித் தேவைகளையும் பிரதிலிபி ராயல்டியிலிருந்தே பூர்த்திசெய்துகொள்ளும் நிலையை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். நமது கதைகள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைய வேண்டும் என்பதே நம் இலக்கு. ஜே.கே. ரவுலிங்ஸ், ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின்ஸ் ஆகியோர் போல் உலகளவில் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் உங்களிலிருந்து உருவாக வேண்டும் என விரும்புகிறோம்!
மேல்நோக்கிய இப்பயணம் கடினமானது தான். ஆனால் நீங்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடருவோம். எங்கள் முயற்சிகள் எங்களை கீழே தள்ளினாலும், உங்கள் அன்பினாலும், உங்கள் நம்பிக்கையினாலும், நாங்கள் மீண்டும் மேலே வருவோம்.
அனைவருக்கும் நன்றி!
அன்புடன்,
ரஞ்சித் பிரதாப் சிங்.